Home இந்தியா ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினர் மகிழ்ச்சியில்…………

ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினர் மகிழ்ச்சியில்…………

by Jey

ஒடிசாவில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சொந்த மாவட்டமான மயூர்பஞ்சில் பழங்குடியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த 60 பேர், ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தோழியரும் அடங்குவர்.

ஜனாதிபதி மாளிகையில் திரவுபதி முர்முவுடன் மதிய உணவு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்ததால், ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்

பதவியேற்பு விழா முடிந்த பின், இவர்கள் அனைவருக்கும் திரவுபதி முர்மு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார். இவர்கள் அனைவரும் ஜனாதிபதியுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். தங்கள் மண்ணின் மகளுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டது இன்ப அதிர்ச்சி அளித்தது என அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, மயூர்பஞ்ச் மாவட்டத்தின் முன்னாள் ஜில்லா பரிஷத் தலைவரும், முர்முவின் தோழியுமான சுஜாதா முர்மு கூறியதாவது: பார்லி.,யின் மைய மண்டபத்தில் நடந்த ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.

நாங்கள் அனைவரும், எங்கள் கலாசாரப்படி பாரம்பரிய உடை அணிந்து இந்த விழாவில் பங்கேற்றோம். மதிய உணவு சைவம் தான். ஜனாதிபதி அசைவ உணவு சாப்பிட மாட்டார்; பூண்டு, வெங்காயம் கூட சாப்பிட மாட்டார். இது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

ஜனாதிபதி மாளிகைக்குள் மொபைல் போன் மற்றும் கேமராக்கள் அனுமதிக்கப் படாததால், ஜனாதிபதியுடன் ‘செல்பி’ எடுக்க முடியவில்லை என்பது தான் ஒரே வருத்தம். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

related posts