கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள, ஐந்து கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்தன.
இவற்றால் நடந்த மண் கொள்ளை, நீர்நிலைகள் அழிப்பு, யானை வலசை பாதைகள் அழிப்பு, சூழலியல் இழப்பு, மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது குறித்து ‘தினமலர்’ நாளிதழில் தொடர் கட்டுரை வெளியானது. தேசிய பசுமை தீர்ப்பாயம் சுயமாக முன்வந்து வழக்காக எடுத்தது.
இதன் காரணமாக, இதே செங்கல் சூளைகள் தொடர்பாக ஐகோர்ட்டில் நடந்து வந்த பல்வேறு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டு பசுமை தீர்ப்பாயத்திடம் முறையிடுமாறு ஐகோர்ட் அறிவுறுத்தியது. ஐகோர்ட் உத்தரவு அடிப்படையில், 197 செங்கல் சூலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி, கோவை கலெக்டர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. தடாகம் பள்ளத்தாக்கில் ஐந்து கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட 556 சர்வே எண்கள் அமைந்துள்ள நிலங்களில், இந்த குழு கள ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் அடிப்படையில், கடந்த 20ம் தேதி சிறப்பு குழுவின் அறிக்கை பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம், 24 பக்கங்கள் கொண்ட அறிக்கையும், 74 பக்கங்கள் கொண்ட பட்டியலும் அதில் இடம்பெற்றுள்ளன.
ஐந்து கிராம ஊராட்சிகளில் எந்தெந்த சர்வே எண்களில் எந்தெந்த செங்கல் சூளை சார்பில் எவ்வளவு கன மீட்டர் மண் எடுக்கப்பட்டுள்ளது என்பது பட்டியலிடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 373 கோடி அளவுக்கு மண் கொள்ளை நடந்திருப்பதாகவும், ரூ. 66 கோடி மதிப்புக்கு சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் அரசு நிலங்களில் மண் கொள்ளை நடந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்குச் சொந்தமான பல்வேறு நிலங்களிலும், மின்வாரியம், பாரதியார் பல்கலை, பூமிதான நிலம், பள்ளவாரி புறம்போக்கு என அரசுக்கு சொந்தமான நிலங்களில் பல கோடி ரூபாய்க்கு மண் கொள்ளை நடந்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இதனால், பல மடங்கு அபராதத்தை பசுமை தீர்ப்பாயம் விதிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது
ஐந்து கிராம ஊராட்சிக்குட்பட்ட, 1,058 சர்வே எண்களில், வெறும் 556 சர்வே எண்களின் நிலங்களில் மட்டுமே மண் கொள்ளை பற்றியும், சூழலியல் பாதிப்பு பற்றியும் சிறப்புக்குழு ஆய்வு செய்திருப்பதால், இது முழுமையான அறிக்கை இல்லை என்று தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழு நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கின்றனர். தடாகம் பள்ளத்தாக்கில் அரசு நிலங்களில் மட்டுமே 1,000 கோடி ரூபாய்க்கு மேல் மண் கொள்ளை நடந்திருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக தங்கள் தரப்பு பதில் மனுவையும் விரைவில் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.