அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 15 வயது சிறுவன் தமது சகோதரர்கள் மூவரையும் கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கர சம்பவம் அலாஸ்கா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளதாக மாகாண ஆயுதப்படை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 4.20 மணியளவில் துப்பாக்கிச்சூடு தொடர்பில் மாகாண ஆயுதப்படை பொலிசார்ருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்த நான்கு சிறார்களை மீட்டுள்ளனர்.
இதில், 15 வயது சிறுவன் தன்னைத்தானே சுட்டுக்கொள்ளும் முன், 5, 8 மற்றும் 17 வயதுடைய தனது உடன்பிறந்தவர்கள் மூவரைச் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும், 7 வயதுக்கு உட்பட்ட இன்னும் மூன்று சகோதரர்கள் சம்பவத்தின் போது அந்த குடியிருப்பில் இருந்ததாகவும், அவர்கள் காயமின்றி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அது மட்டுமின்றி, துப்பாக்கிச் சூடு நடந்தபோது குழந்தைகளின் பெற்றோர் வீட்டில் இல்லை என்றே தெரிய வந்துள்ளது. மேலும், இந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், அதேசமயம் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள எந்த சாத்தியமான நோக்கத்தையும் அதிகாரிகள் தரப்பு வெளியிடவில்லை என கூறப்படுகிறது.
மேலும் சம்பவத்தில் சிறுவன் பயன்படுத்திய துப்பாக்கி அவர்களின் குடும்பத்தினருக்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.