ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட 20 மாகாணங்களில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 45 பேரை காணவில்லை.
தெஹ்ரானின் வடக்கு பகுதிகளில் இன்னும் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி, மந்திரிகள் மற்றும் கவர்னர்களுக்கு வெள்ளப்பெருக்கால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தயாராகும்படி கூறியுள்ளார். எனினும், பல மாகாணங்களில் மழை தொடரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, கனமழையால் பல விமான நிலையங்கள், முக்கிய நெடுஞ்சாலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கானோர் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. 25 ஆயிரம் குடியிருப்பு வீடுகள் பாதிப்படைந்து உள்ளன. ஈரானில் 2019ம் ஆண்டு கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.