இஸ்லாமாபாத்-பாக்., நிதி நெருக்கடியை சமாளிக்க கூடுதலாக, 990 கோடி ரூபாய் அளவிற்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
நம் அண்டை நாடான பாக்., இன்னொரு அண்டை நாடான இலங்கையை போல அன்னியச் செலாவணி பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச நிதியம் ஆகியவற்றுக்கு தர வேண்டிய நிலுவையை தர முடியாமல், பாக்., திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியை சமாளிக்க, பாக்.,கிற்கு, அவசரமாக 3,300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதையொட்டி, பட்ஜெட்டில் அறிவித்ததை விட கூடுதல் வரிகள் வாயிலாக, 990 கோடி ரூபாய் திரட்ட பாக்., முடிவு செய்துள்ளது.இதற்கு நிதியமைச்சர் மிப்டா இஸ்மாயில் தலைமையிலான பொருளாதார ஒருங்கிணைப்பு குழு அனுமதி அளித்துள்ளது.
ஒரு வாரத்தில் புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பாக்., எண்ணெய் நிறுவனத்திற்கு, அதன் வெளிநாட்டு கடன்களை திரும்ப அளிக்க, இந்த 990 கோடி ரூபாயை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பெட்ரோல், டீசல் விலையை இரு வாரங்களுக்கு ஒரு முறை நிர்ணயிப்பதற்கு பதிலாக, வாரந்தோறும் நிர்ணயிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.