கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவ மழை துவங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு லேசான மழை பெய்ந்தது. பின் கடந்த சில தினங்களாக பருவ மழை தீவிரமடைந்தது. கேரள மாநிலத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. இந்நிலையில், தொடர்மழையால் குட்டிகானம், தொடுபுழா உள்ளிட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை பாதிப்புகளை சமாளிக்கவும், மீட்புப் பணிகளை உடனே மேற்கொள்வது குறித்தும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். பின் அவர் கூறியதாவது: ஆறுகள், நீர்நிலைகள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்.
இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். பேரிடர் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் காவல்துறையினர், தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்தில் இருந்து கேரளாவுக்கு 4 குழுக்கள் விரைந்துள்ளன. இக்குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவின் தென் மாவட்டங்களில் வரும் நாளை (ஆக.,3ம் தேதி) வரை கனமழை பெய்யும். அதன் பின்னர் வட மாவட்டங்களில் மழை தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.