தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அமைதி ஊர்வலம் நடத்திடலாம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பான அந்த கடிதத்தில், “எத்திசையும் புகழ் மணக்கும் தலைவர் கலைஞர் வாழ்கவே. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
நம் இதயத்துடிப்பாக விளங்கி, இயக்கத்தை எப்போதும் வழி நடத்துவதற்கும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதற்கும் முழுப் பேராற்றலாக விளங்கும் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஆகஸ்ட் 7 அன்று நான்காம் ஆண்டு நினைவு நாள்.
நம்மை அவர் விட்டுச் சென்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டனவா என நினைத்தபோது இதயம் ஒரு நொடி நின்றுவிட்டது. அவரா? நம்மை விட்டுப் பிரிவதா? கணப் போதும் அகலாமல், நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து, நம்மை உயிர்ப்போடு இயக்கிக் கொண்டிருப்பவரே முத்தமிழறிஞர் கலைஞர்தானே என்று நினைத்ததும், நின்றுபோன இதயம் அடுத்த நொடியிலிருந்து மீண்டும் துடித்தது.
ஆம்.. தலைவர் கலைஞர்தான் ஒவ்வொரு நொடியும் நம் நினைவெல்லாம் நிறைந்திருக்கிறார். நமக்கு நிழல் தரும் பசுஞ்சோலையாக விரிந்து நிற்கிறார். உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது ஆட்சியின் மகத்தான இயங்கு சக்தியாக விளங்குகிறார்.