முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் நடத்திய தீவிர போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 9-ந்திகதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி விட்டார்.
அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார். பின்னர், மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார்.
அதிபர் பதவியில் இருந்தும் விலகினார். புதிய அதிபருக்கான தேர்தலில் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராக பதவியேற்று கொண்டார்.
எனினும், அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்குள்ள காலி முகத்திடலிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காலி முகத்திடலை விட்டு நாளை மாலை 5 மணிக்குள் வெளியேற இலங்கை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
நாளை மாலைக்குள் வெளியேறாத போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.