அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான மத்திய அமலாக்கத் துறை வழக்குக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது.
கடந்த 2001 – 06ம் ஆண்டு நடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது வீட்டுவசதித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார்.
2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் விசாரணை நடந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது.
அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது.தனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யவும், சொத்து முடக்கத்தை நீக்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாயா, ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, அமலாக்க துறை சார்பில் அவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து, விசாரணையை தள்ளி வைத்த நீதிபதிகள், அதுவரை வழக்குக்கு இடைக்கால தடை விதித்தனர்.
அதைத் தொடர்ந்து இவ்வழக்கில் அமலாக்கத் துறை சார்பில், வழக்கறிஞர் என்.ரமேஷ் பதில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அமர்வில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதனால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்’ என்றார்.விசாரணையை, செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி, விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.