Home இந்தியா வைகை ஆற்றில் வெள்ள அபாயம்

வைகை ஆற்றில் வெள்ள அபாயம்

by Jey

வங்கக்கடலில் வரும் 7 ம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பல கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில், மூன்றாவது நாளாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை, 9:00 மணி நிலவரப்படி, அவலாஞ்சி, 200 மி.மீ., தேவாலா, 181 மி.மீ., நடுவட்டம், 152 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

சராசரியாக, 67.50 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. ரெட் அலர்டையொட்டி இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்றாவது விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை முதல் மழை தொடர்வதால், மலை காய்கறி, தேயிலை தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். தொரப்பள்ளி ஆற்றில் இரவு நீர்வரத்து அதிகரித்தது.

மாவட்ட முழுவதும், 13 அணைகள், 30க்கு மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. தென் மேற்கு பருவ மழையால், இன்று காலை 6:00 நிலவரப்படி அணைகளுக்கு வினாடிக்கு, 300 முதல் 400 கன அடி வரை நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. குந்தா, கெத்தை, மாயார் உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியது, பிற அணைகள், 80 சதவீதம் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லி மழையில் விடாமல் மழை கொட்டுகிறது. இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மாசிலா அருவி, நம்மருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு கர்நாடக அணைகள் கே.ஆர்.எஸ். கபினியில் இருந்து 94, 963 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரியில் 1.8 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திருச்சி மேலூர், உள்ளிட்ட கரையோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். கொள்ளிடத்தை ஒட்டிய பகுதிகளிலும் அலர்ட்டாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 5வது நாளாக தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் வெள்ள அபாயம் ; மதுரை வைகை அணையில் தண்ணீர் மட்டம் மொத்தம் 71 அடியில் 70 அடியாக உயர்ந்துள்ளது. இங்கு வைகையாற்றில் 4,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

related posts