தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஆக., 6) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஆக., 6) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் வட மாவட்டங்கள், புதுச்சேரி , கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட மாவட்டங்கள், புதுச்சேரி , கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் (ஆக.,7,8) திகதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதே போல் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இப்பகுதிகளில் மீனவர்கள் இன்று (ஆக.,6) செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.