கீழடி 8ம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் 74 சூது பவளங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மார்ச் 30ல் கொந்தகை தளத்தில் தொடங்கிய அகழாய்வில் நான்கு குழிகளில் 54 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.
தாழிகளினுள் உள்ள பொருட்களை மதுரை காமராஜ் பல்கலை கழக மரபணு பிரிவுடன் இணைந்து வெளியே எடுக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் சேதமடைந்த நிலையில் உள்ள முதுமக்கள் தாழியினுள் நுண்ணிய துளையுடன் கூடிய 74 சூது பவளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் பண்டைய காலத்தில் செல்வந்தர்கள், மன்னர்கள் அணிகலன்களாக பயன்படுத்திய விலைமதிப்பு மிக்க சூது பவளங்கள் கீழடிக்கு வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக கொந்தகை தாழியினுள் 74 சூது பவளங்கள் கிடைத்துள்ளன.ஏற்கனவே 5ம் கட்ட அகழாய்வில் கீழடியில் வராஹி (பன்றி) உருவம் பதித்த சூது பவளம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கொந்தகையில் கிடைத்துள்ள சூதுபவளம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீழடி அகழாய்வு தள இணை இயக்குனர் ரமேஷ் கூறுகையில்: கொந்தகை தளத்தில் மூன்று கட்ட அகழாய்வில் 134 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு அதில் 80வது தாழியினுள் 74 சூதுபவளங்கள் மற்றும் செப்பு வளையம் சிறிய துண்டு உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காலம் பற்றி அறிய ஆய்விற்காக அனுப்ப பட உள்ளது, என்றார்.