Home உலகம் எப்.பி.ஐ. அதிகாரிகளின் சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம்

எப்.பி.ஐ. அதிகாரிகளின் சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம்

by Jey

அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துசென்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க நீதித்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புளோரிடா மாகாணத்தில் உள்ள டிரம்பின் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ. (மத்திய புலனாய்வு குழு) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

தனக்கு தகவல் தெரிவிக்காமலேயே தனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறி எப்.பி.ஐ. அதிகாரிகளின் சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இது டிரம்ப் ஆதரவாளர்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது.

அவர்கள் எப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள எப்.பி.ஐ. அலுவலகங்கள் மற்றும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஓகியோ மாகாணம் சின்சினாட்டி நகரில் உள்ள எப்.பி.ஐ. அலுவலகத்தில் போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பை மீறி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றார்.

ஆனால் அங்கிருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்ததால் அலுவலகத்தின் கண்ணாடி சுவர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்ற போலீசார், அவர் அங்குள்ள மறைவான இடத்தில் சென்று பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் போலீசார் அவரை நெருங்கி சென்றபோது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதை தொடர்ந்து போலீசார் அவரை சுற்றிவளைத்து சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

எப்.பி.ஐ. அலுவலகத்தில் தாக்குதல் நடத்த முயன்று, சுட்டுக்கொல்லப்பட்ட நபர் 42 வயதான ரிக்கி ஷிபர் என்றும், இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த நாடாளுமன்ற கலவரத்தில் தொடர்புடையவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

related posts