அமெரிக்காவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது. அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மாதம் 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் ராணுவ மந்திரியான லாயிட் ஆஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 69 வயதான லாயிட் ஆஸ்டின் தனக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அடுத்த 5 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்டின் 2-வது முறையாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் அவருக்கு தொற்று உறுதியானது. ஆஸ்டின் பூஸ்டர் உள்பட கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.