புதுடில்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய இல்லத்தை கட்டும் பணிகள் குறித்து, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தலைநகர் புதுடில்லியில், அனைத்து மாநிலங்களுக்கும் நிலம் ஒதுக்கப்பட்டு, அரசு விருந்தினர் இல்லங்கள் கட்டப்பட்டன.
தமிழகத்திற்கு, சாணக்யாபுரி கவுடில்யா சாலையில் இடம் கிடைத்து, அங்கு இல்லம் கட்டப்பட்டது.அதை, அப்போதைய முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். பின், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஆகியோர் முதல்வர்களாக இருந்த காலத்தில், இந்த கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில் போதிய வசதி இல்லாததால், ஜெயலலிதா முதல்வராக இருந்போது, சாணக்யா லேன் பகுதியில், புதிய இல்லம் கட்டப்பட்டது. அங்குதான், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வந்து தங்கி செல்கின்றனர்.பழைய இல்லம், விருந்தினர்களுக்காக இருந்து வரும் நிலையில், அதை இடித்துவிட்டு, புதிய இல்லம் கட்ட இப்போதைய முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டார்.
இதையடுத்து இல்லத்தை நவீன வசதிளுடன் பிரமாண்டமாக கட்ட தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.இதற்கான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், தமிழ்நாடு இல்ல தலைமை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்