இலங்கை அரசாங்கம், ஒரு மாத கால அவசரகாலச் சட்டம் காலாவதியாக அனுமதித்ததன் பின்னர், இலங்கை தொடர்பில் தமது குடிமக்களுக்கு விடுக்கப்படுள்ள பயண எச்சரிக்கை ஆலோசனைகளை நீக்குமாறு வெளிநாடுகளை கோரவுள்ளது.
நிலைமையை மேம்படுத்திக்கொண்டு அவசரகாலச் சட்டத்தை தொடரும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
அவசரக்கால சட்டம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரும் போது அதிக காப்பீட்டு செலவீனங்கள் உள்ளடக்கப்பட்டு வந்தன. எனவே அவசரகாலச் சட்டம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க தடையாக இருந்தது.
இதன் காரணமாகவே அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் இலங்கைக்கான பயணங்களுக்கு எதிராக எச்சரிக்கையை விதித்துள்ளன.
இதேவேளை அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டே அவசரகாலச் சட்டத்தை நீக்கிக்கொள்ள அரசாங்கம் முடிவெடுத்தது.
இதற்கிடையில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் இரண்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புச் சூழ்நிலையைச் சமாளிக்க தற்போதுள்ள மற்றைய சட்டங்கள் போதுமானவை என்றும், இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சகம் தேசிய பாதுகாப்பு சபையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.