இம்ரான் கான் தலைமையில் செயல்படும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த ஷபாஸ் கில், ராணுவத்திற்கு எதிராக பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் பேரணி நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், போலீஸ் காவலில் ஷபாஸ் கில் கொடூரமான சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டார். எதிர்க்கட்சிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், மக்களை பயமுறுத்தவும் கில் சித்ரவதை செய்யப்பட்டார்.
ஷபாஸ் கில்லை சித்ரவதை செய்ததற்காக இஸ்லாமாபாத் போலீஸ் ஐஜி, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், பெண் மாஜீஸ்திரேட் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்வோம். ஐஜியை விட்டு வைக்க மாட்டோம் என்றார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ஊடக அமைப்பான பாகிஸ்தான் மின்னணு மீடியா ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், அரசு அமைப்புகளுக்கு எதிராக பேசுவதை ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும். இம்ரான் கான், அடிப்படை ஆதாரமின்றி அரசு அமைப்புகள் மீது குற்றம்சாட்டி வருகிறார்.
இதனால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும். அவரின் பேச்சு அரசியல்சாசனத்திற்கும், மீடியாக்களின் நன்னடத்தைக்கும் எதிரானது.
இதனால், சாட்டிலைட் டிவி சேனல்களில் இம்ரான் கான் பேச்சுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. அவரது பதிவு செய்யப்பட்ட உரையை, நன்றாக கண்காணித்ததுடன், எடிப்டோரியல் பிரிவினர் ஆய்வுக்கு பின் ஒளிபரப்பலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.