உக்ரைன் மக்கள் அனைவரும் வரும் வாரத்தில் அதிக எச்சரிக்கையுடன் விழிப்புடன் இருக்குமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கிரிமியா பகுதிகளில் நடத்தப்பட்ட புதிய குண்டுவெடிப்புகள் மற்றும் அங்குள்ள அணுமின் நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஒரு ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர்.
பிவ்டெனுக்ரைன்ஸ்க் அணுமின் நிலையத்தில் நேற்று நடந்த ரஷிய ஏவுகணை தாக்குதல் மற்றும் உக்ரைனின் மிகப்பெரிய ஜாபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அருகே புதிய குண்டுவெடிப்பு தாக்குதல் ஆகியவற்றால் போரின் போது அணு விபத்து ஏற்படலாம் என்பது பற்றிய புதிய அச்சத்தை தூண்டியுள்ளது.
இந்நிலையில், வரும் 24ம் தேதியன்று உக்ரைன் சுதந்திர தினம் வருவதையொட்டி அங்கு தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. உக்ரைன் சோவியத் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற 31வது ஆண்டு முடிவடைவதை குறிக்கும் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி பதற்றம் அதிகரித்துள்ளதால், கார்கிவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.