27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
அண்மையில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் கைப்பற்றிய இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்தியாவின் பதக்க வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் களம் காணும் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால் அடிக்கடி காயம் மற்றும் போதிய பார்ம் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்.
முதல் சுற்றில் சீனாவின் செங் நிகன் யியுடன் மோதுகிறார். இப்போதைக்கு காமன்வெல்த் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையரில் தங்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் மீது எதிர்பார்ப்பு அதிகமாக நிலவுகிறது.
அவர் 2021-ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலம் வென்று இருந்தார். 21 வயதான லக்ஷயா சென் முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹன்ஸ்- கிறிஸ்டியன் விட்டிங்ஹசை எதிர்கொள்கிறார். இதே போல் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எச்.எஸ்.பிரனாய், கடந்த ஆண்டு இந்த போட்டியில் 2-வது இடத்தை பிடித்தவரான ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் ஆகிய இந்தியர்களும் கவனிக்கத்தக்க வீரர்களாக உள்ளனர்.
இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டி.டி. ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ்18 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இந்த நிலையில், இந்திய வீரர் சாய் பிரனீத், தைவானின் சோவ் டைன் சென்னை இன்று எதிர்கொண்டார். ஆனால் முதல் சுற்றில் சாய் பிரனீத் தைவானின் சோவ் டைன் சென்னிடம் தோல்வியடைந்தார்.அவர் 15-21, 11-15, 15-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.