போக்குவரத்து சேவைக் கட்டணங்களை உயர்த்தும் முடிவினை தி.மு.க. அரசு கைவிட வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்சார சேவைகளுக்கான கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பையும் தாண்டி ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியது, பல்கலைக்கழக சான்றிதழ்களுக்கான கட்டண உயர்வு என்ற வரிசையில் போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களைப் பல மடங்கு வரை உயர்த்த தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளதாக வந்துள்ள செய்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.
மேலும், கொரோனா கொடுந்தொற்று நோயின் பாதிப்பிலிருந்து ஓரளவு விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கையில், ஒருபுறம் அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் விலை விஷம் போல் உயர்ந்து கொண்டு வருவதும், மறுபுறம் அரசு தன் பங்கிற்குத் தொடர்ந்து வரிகளை விதித்துக் கொண்டிருப்பதும் மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.