புலம்பெயர் உறவுகளின் உதவிகளை இலங்கை அரசாங்கம் பெற விரும்பினால் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை முன்வைப்பதுடன் தனது நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
, “கடந்த சில நாட்களுக்கு முன்பாக குறிப்பிட்ட சில புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையையும், அதேபோன்று புலம்பெயர் தனிநபர்கள் சிலரின் மீதான தடையையும் நீக்கியுள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய பரப்பில் அரசியல் பணியாற்றும் சில கட்சிகளும் அமைப்புகளும் இதனை வரவேற்றுள்ள அதேவேளை, பலர் இந்த அறிவித்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.
ரணில் மற்றும் மைத்திரி அரசாட்சியின் போது, இந்தத் தடைகள் நீக்கப்பட்டிருந்தபோதிலும், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் மீண்டும் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.
இது ஒருபுறமிருக்க, ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்ற காலங்களில், இலங்கை அரசாங்கம் இவ்வாறான சில அறிவித்தல்களை வெளியிடுவதும் ஒரு நடைமுறையாக இருக்கின்றது.
இலங்கை இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றது. ஒன்று பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையில் இருக்கின்றது. அந்த வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவையாக இருக்கின்றது.
அவ்வாறான நிதி நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதும் அதேசமயம் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகம் போன்றவற்றைத் திருப்திப்படுத்துவதும் இலங்கைக்கு முக்கியத் தேவைகளாக இருக்கின்றது.
ஆகவே, புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் என்பது அரசாங்கம் தன்னைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகவே தோற்றம் அளிக்கின்றது.
இலங்கை அரசாங்கம் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தாலும் அந்த உறுதிமொழிகளிலிருந்து பல சந்தர்ப்பங்களிலில் பின்வாங்கியிருக்கின்றது.