இலங்கையில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் பயங்கரவாத தடுப்பு சட்டம் (பி.டி.ஏ.) அமலில் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் கடுமையான பிரிவுகள் உள்ளன. இந்த சட்டத்துக்கு உலக நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 மாணவர்கள் மீது இந்த சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த 18-ந் தேதி கைது செய்யப்பட்ட அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பி.டி.ஏ. சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு இலங்கை பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த கைதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள அமெரிக்கா, பி.டி.ஏ. போன்ற சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு எதிரான சட்டங்கள் இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது என குற்றம் சாட்டியுள்ளத
மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை நிலைநிறுத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்வதாக அந்த நாட்டுக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்தார்.
இதைப்போல பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திரும்பப்பெறுமாறு கடந்த ஆண்டே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் இலங்கைக்கு அறிவுறுத்தி இருந்தது. அத்துடன் இலங்கைக்கு எதிரான ஏற்றுமதி தடைகளை விதிப்பது குறித்து பரிசீலிக்கவும் முடிவு செய்திருந்தது.
இவ்வாறு இலங்கையின் பி.டி.ஏ. சட்டத்துக்கு சர்வேதச அளவில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மேற்படி சட்டத்தை திரும்பப்பெற அரசு முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக இலங்கை மந்திரியும், கேபினட் செய்தி தொடர்பாளருமான பந்துல குணவர்தனே கூறுகையில், ‘1979-ம் ஆண்டு முதல் பி.டி.ஏ. அமலில் இருக்கிறது.
இந்த சட்டத்தில் உள்ள விரும்பத்தகாத பகுதிகளை நீக்கி விட்டு ஒரு புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்படும் என சட்டத்துறை மந்திரி மந்திரிசபை கூட்டத்தில் தெரிவித்து உள்ளார்’ என்று கூறினார். இதன் மூலம் 40 ஆண்டுகள் பழைமயான இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடுப்பு சட்டம் முடிவுக்கு வருகிறது