உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா ஈடுபட்டு வரும் சூழலில், ரஷிய அதிபர் புதின் அதிகாரிகளுடன் தொலைக்காட்சி வழியே நடத்திய கூட்டம் ஒன்றில் பேசும்போது, பருவநிலை மாற்றத்தின் விளைவால் கோடை காலம் முழுவதும் ரஷியாவில் காட்டுத்தீயால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன என கூறியுள்ளார்.
இந்த காட்டுத்தீயால், ரஷியாவின் ஐரோப்பிய பகுதி மற்றும் அதன் கிழக்கு பகுதிகளில் நிலைமை மிக மோசமடையும் என அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ அருகே 9 ஆயிரம் ஹெக்டேர் பகுதியை காட்டுத்தீயானது சூழ்ந்து உள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் போன்று காட்சியளிக்கின்றது. ரியாசன் பகுதியில் கடந்த திங்கட் கிழமை அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், 500 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலையை ஐரோப்பிய கண்டம் எதிர்நோக்கி உள்ளது என அறிக்கை ஒன்று எச்சரிக்கை தெரிவிக்கிறது. இதனால், அந்த நாடுகளில், உள்நாட்டு கப்பல் போக்குவரத்து குறைந்து உள்ளது. மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. சில வகை பயிர்களின் விளைச்சலும் குறைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.
ஐரோப்பிய வறட்சி கழகம் வெளியிட்டுள்ள ஆகஸ்டு மாத அறிக்கை ஒன்றில், ஐரோப்பாவின் 47% பகுதிகள் எச்சரிக்கை நிலையில் உள்ளன. ஈரப்பதம் இன்றி மண் வறண்டு போய் காணப்படுகின்றன. 17% பகுதிகள் அபாயம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பகுதிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. இந்த தகவலை ஐரோப்பிய ஆணையமும் மேற்பார்வை செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஐரோப்பாவின் பல பகுதிகளை வறட்சி கடுமையாக பாதிக்க தொடங்கி, ஆகஸ்டு தொடக்கத்தில் அது விரிவடைந்து, மோசமடைந்து உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனால், நவம்பர் வரையில், மேற்கு பகுதியிலுள்ள ஐரோப்பிய-மத்திய தரை கடல் பகுதியில் சாதாரண நிலையை கடந்து, அதிக வெப்பம் மற்றும் வறட்சி நிலை காணப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த கோடை காலத்தில் பல ஐரோப்பிய நாடுகள் பல வாரங்களாக தொடர்ச்சியாக கடும் வெப்பத்தில் சிக்கி தவித்தன.
இது வறட்சி நிலையை மோசமடைய செய்ததுடன், காட்டுத்தீ ஏற்படவும் வழிவகுத்தது. போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகளில் மொத்தம் ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் வெப்ப அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவமும் ஏற்பட்டது. இதுதவிர, மக்களின் சுகாதார பாதிப்புகளுக்கும் எச்சரிக்கை விடும் வகையில் சூழல் ஏற்பட்டது.
பருவகால மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான கூடுதல் நடவடிக்கையை எடுக்க வேண்டிய தேவையையும் வலியுறுத்தியது. சமீபத்திய வறட்சி நிலை ஆனது, 500 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமடைந்து காணப்படுகிறது என ஐரோப்பிய ஆணையமும் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது