அரசியல்வாதிகள் அச்சுறுத்தப்படுவது இழிவுபடுத்தப்படுவது போன்ற வன்முறைகள் அடக்குமுறைகள் என்பனவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவின் நிதி அமைச்சரும் பிரதி பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீ லேண்ட் அண்மையில் பொதுமகன் ஒருவரினால் இழிவுபடுத்த பட்டிருந்தார்.
ஆல்பட்ராவில் கிராண்ட் பியரே பகுதியில் கட்டிடம் ஒன்றின் லிப்டில் ஏற முற்பட்டபோது நபர் ஒருவர் துரோகி என கூச்சலிட்டு கிறிஸ்டியாவை அவமரியாதை செய்யும் வகையிலான வார்த்தைகளை பிரயோகித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்த சிறு காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
அச்சுறுத்தல்கள் வன்முறைகள் அடக்குமுறைகள் போன்ற எந்த வகையிலான விடயங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அது ஜனநாயகத்தை மலினப்படுத்த கூடியது எனவும் அனைவரின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் கனடிய சமூகம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு நாட்டின் சகல அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இன மத பால் நிலை அடிப்படையில் எவரும் துன்புறுத்தப்படவோ அடக்குமுறைக்கு உட்படுத்தப்படவோ அனுமதிக்கப்பட முடியாது என ட்ரூடோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.