ஆப்கானிஸ்தானில் முகமது ஹசன் அகுந்த் தலைமையில் தலிபான்கள் இடைக்கால அரசை அமைத்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் வீடுவீடாக சென்று அங்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்று தலிபான்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது.
குண்டுஸ் மாகாணத்தில் உள்ள உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, பாதுகாப்புப் படையினர் நகரம் மற்றும் மாகாணத்தின் சில மாவட்டங்களில் வீடு வீடாகச் சோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் திடீர் டிரோன் தாக்குதலில் பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனின் முக்கிய கூட்டாளியான ஜவாஹிரி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகளின் நோக்கம் சட்டவிரோத உபகரணங்களை சேகரிப்பதே என்று தலிபான் அதிகாரிகள் கூறியுள்ளனர். “நாங்கள் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கண்டுபிடித்தோம், இது குண்டூஸ் மாகாணத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும்” என்று கூறியுள்ளனர்.
ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து மறைந்து போக வேண்டும், இதற்கு பதிலாக, மக்கள் வேலை செய்யத் தொடங்க வேண்டும், பேனாவைப் பயன்படுத்த வேண்டும், தங்கள் குழந்தைகளை கல்விக்கு வழிநடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா விட்டுச் சென்றது, அது இறுதியில் தலிபான்களின் கைகளில் வந்து சேர்ந்தது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அந்த ஆயுதங்கள் மற்றும் இராணுவ பாகங்கள் ஆப்கானிய துப்பாக்கி வியாபாரிகளால் கடைகளில் வெளிப்படையாக வர்த்தகம் செய்யப்படுகின்றன.
ஆப்கானிஸ்தான் ராணுவ தளங்களில் இருந்தும், ஆப்கானிஸ்தான் அரசு வீரர்கள் மற்றும் தலிபான் போராளிகளிடமிருந்தும் கடத்தல்காரர்கள் ஆயுதங்களை வாங்கி அவற்றை சேகரித்து வருகின்றனர்.
இந்த ஆயுதங்கள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடியினப் பகுதிகளில் உள்ள ஆயுத சந்தைகளில் விற்கப்படுகின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் ஆயுதங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில் பாகிஸ்தானுக்கு கடத்தப்படுகின்றன.
மேலும், சர்வதேச போதை மருந்து சந்தைகளுக்கு அபின் விநியோகத்தின் பிரதான ஆதாரமாக ஆப்கானிஸ்தான் உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச சந்தைகளை அபின் சென்றடைய, போதைப்பொருள் நெட்வொர்க்குகள் செயல்படும் போக்குவரத்து மையமாக பாகிஸ்தான் உள்ளது. அங்கிருந்து பல வழிகளில் விநியோகம் செய்யப்படுகின்றன.