1.50 கோடி ரூபாய் செலவில் மாவட்ட நிர்வாகம் புத்தக கண்காட்சியை நடத்தியுள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் அந்த இடம் வெள்ளக்காடாக மாறியது. புத்தகங்கள் நீரில் மூழ்கி நாசமாகின.
அரங்கத்தை தரக்குறைவாக அமைத்த ஒப்பந்ததாரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் வரிப்பணத்தை வீணடித்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து, 1.50 கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும்.
கடலுக்குள்ள, 81 கோடி ரூபாயில பேனா சின்னம் வைக்க போற அரசுக்கு, பிசாத்து, 1.50 கோடி ரூபாய் எல்லாம் பெரிய விஷயமாகவே படாது!
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்குள் பன்னீர்செல்வம் சென்றபோது, சாலையின் வெளியே நடந்த சம்பவங்களின் வீடியோவை போலீசார் வெளியிட்டால், அவர் நிரபராதி என்பது தெரியவரும்.
‘யாரை குற்றவாளி ஆக்கணும்; யாரை நிரபராதி ஆக்கணும் என்பதை எல்லாம் ஆளுங்கட்சியினர் சொல்படிதான் போலீசார் செய்வாங்க’ என, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு பேசியதை நீங்க கேட்கலையா?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
நடப்பு, 2022- – 23-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், தமிழக அரசின் சொந்த வரி வருவாய், 52.30 சதவீதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதே நேரத்தில், மது உற்பத்தி மீதான கலால் வரி வாயிலாக கிடைக்கும் வருமானம், 1,199.23 கோடியில் இருந்து, 2,594.55 கோடி ரூபாயாக, அதாவது, 116.30 சதவீதம் அதிகரித்துஇருக்கிறது. மாநில அரசின் விற்பனை வரி வருவாய், 4,000 கோடி ரூபாய் உயர்வுக்கு மது வணிகமே காரணம்.
தமிழக அரசின் வரி வருவாயில் பாதியளவு, மது விற்பனை வாயிலாக மட்டுமே கிடைத்திருப்பது வேதனை அளிக்கிறது.
மது விற்பனையில் வரும் வருமானத்தை நம்பி, அரசை நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு கொண்டு வந்தவங்க தான் இதுக்காக வேதனைப்படணும்!
தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் பேட்டி:
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் நெல் குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய், கரும்பு டன்னுக்கு, 4,500 ரூபாய் தருவதாக கூறியது. எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடுவோம் என்றனர். ஆனால், இன்றைக்கு முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர்.