சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதன்படி பேட்டிங் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்திலும், முகமது ரிஸ்வான் 2-வது இடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 17-வது இடத்திலும், விராட் கோலி 34-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட்டும் (792 புள்ளி), 2-வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் தப்ரைஸ் ஷம்சியும் (716 புள்ளி) இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் (708 புள்ளி) இரு இடம் உயர்ந்து 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆசிய கிரிக்கெட்டில் கலக்கும் மற்றொரு ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் 7 இடங்கள் எகிறி 9-வது இடத்துக்கு வந்துள்ளார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர்குமார் 8-வது இடது இடம் வகிக்கிறார். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 8 இடங்கள் அதிகரித்து 5-வது இடத்தை பெற்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுடன், 33 ரன்களும் எடுத்ததால் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. அவரது சிறந்த தரநிலை இதுவாகும். டாப்-4 இடங்களில் முறையே முகமது நபி (ஆப்கானிஸ்தான்), ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), மொயீன் அலி (இங்கிலாந்து), மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) ஆகியோர் உள்ளனர்.