கடந்த சில நாட்களாக தென்பெண்ணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிரமடைந்திருக்கும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருக்கோவிலுார் தென்பெண்ணையாற்றில் 20,000 கன அடியை தாண்டி வெள்ளம் ஆர்பரித்து செல்கிறது.கர்நாடக மாநிலம் நந்தி துர்கா மலையில் தென்பெண்ணையாறு உருவெடுக்கிறது.
இதனால் தமிழக எல்லையான கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணை நிரம்பியது. இங்கிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரால் சாத்தனுார் அணை நிரப்பியது.
கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 15,360 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
119 அடி உயரம் உள்ள அணையில் விவசாய பயன்பாட்டை கருத்தில் கொண்டு செப்டம்பர் மாத இறுதிவரை 117 அடி மட்டுமே தண்ணீரை சேமிக்க வேண்டும்.
எஞ்சிய நீரை அப்படியே வெளியேற்ற வேண்டும் என்ற விதியின்படி, அணை ஏற்கனவே 117 அடி அதாவது 6,875 மில்லியன் கன அடி நீர் இருப்பில் உள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இத்துடன் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பெய்யும் மழை நீரும் சேர்ந்து நேற்று காலை திருக்கோவிலுார் அணைக்கட்டுக்கு வினாடிக்கு 20,000 கன அடி நீராக சென்று கொண்டிருந்தது.
இதன் காரணமாக தென்பெண்ணையாற்றின் இரு கரையையும் தொட்டுக்கொண்டு வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.
எனினும் திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து பிரியும் பம்பை வாய்க்கால், ராகவன் வாய்க்கால், மலட்டாற்றில் அதன் முழு கொள்ளளவு தண்ணீரையும் திருப்பி விடாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதி அளவு தண்ணீரையே திறந்துள்ளனர்.
இதற்குக் காரணம் கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்கால்வாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு அவை முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில், தற்பொழுது கால்வாய்களில் புதர் மண்டி இருப்பதால் உடைப்பு ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் குறைந்த அளவு தண்ணீரே வாய்க்கால்களில் திருப்பி விடுகின்றனர்.