Home உலகம் அர்ஜெண்டினாவின் துணை அதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

அர்ஜெண்டினாவின் துணை அதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

by Jey

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவின் துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா பெர்னாண்டஸ் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

அர்ஜெண்டினாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் கிறிஸ்டினா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகி கிறிஸ்டினா விளக்களித்து வருகிறார்.

அந்த வகையில் வழக்கு ஒன்றில் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு புவெனோஸ் அய்ரோஸ் நகரில் உள்ள தனது இல்லத்திற்கு கிறிஸ்டினா வந்தார். அங்கு அவரது ஆதரவளர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், கிறிஸ்டினா பெர்னாண்டஸ் நெற்றி மீது துப்பாக்கியை காட்டி சுட முயன்றான். ஆனால் அந்த துப்பாக்கி வேலை செய்யவில்லை. உடனடியாக அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து அவரிடம் இருந்த துப்பாக்கியை கைப்பற்றினர். அதில் 5 தோட்டாக்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை முயற்சியில் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் பிரேசில் நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பேசிய அர்ஜெண்டினா அதிபர் அல்பெர்டோ பெர்னாண்டஸ், கடந்த 1983 ஆம் ஆண்டு ராணுவ ஆட்சியில் இருந்து அர்ஜெண்டினா விடுதலை அடைந்த பிறகு அங்கு நடந்த மிக மோசமான சம்பவம் இந்த கொலை முயற்சி என்று தெரிவித்துள்ளார்.

related posts