Home இந்தியா ஏழு மாநில சட்டசபை தேர்தலையும், லோக்சபா தேர்தலை போலவே எதிர்கொள்ள வேண்டும்

ஏழு மாநில சட்டசபை தேர்தலையும், லோக்சபா தேர்தலை போலவே எதிர்கொள்ள வேண்டும்

by Jey

மத்திய அமைச்சர்கள் டில்லியில் தங்கியிருக்காமல், வார இறுதி நாட்களில், அவரவர் மாநிலங்களுக்கு சென்று, மக்களை சந்திக்க வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ள தகவல்வெளியாகி உள்ளது.

லேக்சபா தேர்தலுக்கு முன்பாக, வரும் டிசம்பரில் குஜராத், ஹிமாச்சல் பிரதேசம்; 2023 துவக்கத்தில் கர்நாடகா, இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய, ஏழு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

இதில், நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இந்த ஏழு மாநில சட்டசபை தேர்தலில் குறைந்தது, ஐந்து மாநிலங்களிலாவது வெற்றி பெறாவிட்டால், 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் வலு பெற்று விடும் என, பா.ஜ., தலைமை கருதுகிறது.

எனவே, ஏழு மாநில சட்டசபை தேர்தலையும், லோக்சபா தேர்தலை போலவே எதிர்கொள்ள வேண்டும் என, கட்சியினரை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தேசிய நிர்வாகிகளிடம் மோடி கூறியுள்ளதாவது:லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரும் சட்டசபை தேர்தல்கள் முக்கியமானவை. அதுவும் டிசம்பரில் நடக்கும் குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்கள், மிகமிக முக்கியமானவை. நாம் தான் வெல்வோம் என, அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது.

எப்போதும் மக்களிடம் தொடர்பில் இருக்க வேண்டும். மக்களிடம் நேரில் உரையாடி, அவர்களின் குறைகளையும், கள நிலவரத்தையும் துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அமைச்சர்கள், டில்லியிலேயே தங்கியிருக்காமல், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், அவரவர் மாநிலங்கள் அல்லது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு சென்று, மக்களை நேரில் சந்திக்க வேண்டும். இது சம்பிரதாயமாக இல்லாமல், உண்மையானதாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.மத்திய அமைச்சர்கள் மட்டுமல்லாது, தேசிய நிர்வாகிகள், எம்.பி.,க்களும் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். மத்திய அமைச்சர்கள் தங்களுக்கென ஒரு லோக்சபா தொகுதியை தேர்ந்தெடுத்து, அங்கு தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும். ஏழைகள், நடுத்தர மக்கள், கட்சியின் கிளை கமிட்டி நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்று உணவருந்த வேண்டும். ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்தையும் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களுக்கான தொகுதிகளை, பா.ஜ., தலைமை ஒதுக்கி வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் ரயில்களில் பயணித்தும், கிராமங்களுக்கு சென்றும் மக்களை சந்தித்து வருகிறார்.

மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத், கர்நாடகா; மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் குஜராத்திலும் வார இறுதி நாட்களில் பயணம் செய்து, மக்களை சந்தித்து வருகின்றனர்.

related posts