உச்சநீதிமன்றத்தின் கிளை தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கான ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும், பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி கட்டடங்களை பராமரிக்க ரூ315 கோடி நிதி ஒதுக்கி புதுப்பிக்கும் பணிகளும் துவங்கின.
உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ் .கே. கவுல், இந்திரா பானர்ஜி, ஐகோர்ட் நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சென்னை உயர்நீதிமன்றம் 160 வருடங்கள் பழமையானது. உயர்நீதிமன்ற கட்டடம் கம்பீரமானது. அதே போல் புதிதாக அமைய இருக்கும் சட்டக்கல்லூரி கட்டடமும் கம்பீரமாக இருக்க வேண்டும். சென்னையில் அமைந்துள்ள பல்வேறு பாரம்பரிய கட்டடங்கள் நாம் செம்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும்.
பாரம்பரிய கட்டடங்களை பாதுகாப்பது வரலாற்றை பாதுகாப்பதாகும். ஒரே இடத்தில் நீதிமன்றம் இருப்பது, பொதுமக்கள், வழக்கறிஞர்களுக்கு வசதியாக இருக்கும். நீதித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதியும், நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் கலந்தவை ஆகும்.
தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்க வேண்டும். தமிழகத்தில் 35 புதிய நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசின் சார்பில் ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.