Home இந்தியா ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு

ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு

by Jey

கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயிலில் பயணம் செய்ய போதிய பயண சீட்டு கிடைக்காததால் சுற்றுலா பயணிகள் நீண்ட நாட்கள் காத்திருந்து முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே குன்னூர், பர்லியாறு, ஆடர்லி, ஹில்குரோவ் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக கல்லாறு-ஹில்குரோவ் இடையே நிலச்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தது.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டது. அதில் 180 பயணிகள் இருந்தனர். மலைரெயில், கல்லாறு-ஹில்குரோவ் 7 கி.மீ தொலைவில் சென்றபோது, மலைப்பாதையில் ராட்சத பாறைகள் கிடப்பதை பார்த்தார்.

உடனடியாக மலைரெயில் என்ஜின் டிரைவர், சாதுர்யமாக ரெயிலை பின்னோக்கி இயக்கியதுடன், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில்நிலையத்திற்கு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்டு ரெயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த ராட்சத பாறைகள் கம்ப்ரஸர் மூலம் துளையிட்டு வெடிவைத்து தகர்க்கப்பட்டது

related posts