சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் வேல்சத்திரியன் (வயது 38). சினிமா பட இயக்குனர்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘நோ’ என்ற பெயரில் புதிதாக சினிமா படம் எடுப்பதாகவும், அதற்கு துணை நடிகைகள் தேவை என்றும் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தினார். இதை நம்பி ஏராளமான பெண்கள் அவரை அணுகி உள்ளனர்.
அப்போது அவர் இளம்பெண்களிடம் சினிமா ஆசையை தூண்டி விட்டு அவர்களை ஆபாசமாக படம் எடுத்து சீரழிப்பதாக இரும்பாலையை சேர்ந்த கனகா என்பவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இயக்குனர் வேல்சத்திரியன், அவருடைய பெண் உதவியாளரான ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி (23) ஆகிய 2 பேரை கைதுசெய்தனர்.
சினிமா கம்பெனியில் போலீசார் நடத்திய சோதனையில் அதிர்ச்சி தரும் வகையில் 30க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள், கணினி, லேப்டாப், கேமரா, பென் டிரைவ் சிக்கியது. இயக்குநரின் ஹார்டு டிஸ்குகளில் 300க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
.
அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்து வருகின்றனர். இதனிடையே வேல்சத்ரியனிடம் 150 ஆண்கள், 250 இளம்பெண்கள் என 400 பேர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு பயோடேட்டா கொடுத்துள்ளனர். இதில் சிலரிடம் தனது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தலா ரூ.30 ஆயிரம் வரை வேல்சத்ரியன் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பயோடேட்டா கொடுத்தவர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட கேமராவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் படங்கள் உள்ளன. ஹார்டுடிஸ்க்கில் சில பெண்களின் அரைநிர்வாண படங்கள், வீடியோக்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த படங்களில் உள்ள பெண்களை கண்டறிந்து அவர்களை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நேற்று முன்தினம் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
நேற்றும் 5க்கும் மேற்பட்ட பெண்களிடம் போலீசார் விசாரித்தனர். ஹார்டுடிஸ்க்குகளில் இருந்த படங்கள் எதுவும் அழிக்கப்பட்டுள்ளதா, அவ்வாறு அழிக்கப்பட்டால் அந்த பதிவுகளை மீண்டும் எடுக்கமுடியுமா என ஆய்வுக்காக சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி உள்ளனர்.
இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நேற்று சேலம் கோர்ட்டில் சூரமங்கலம் போலீசார், மனு தாக்கல் செய்துள்ளனர்.