தென் கொரியாவில் மணிக்கு 290 கி.மீ., வேகத்தில், ‘ஹின்னம்னார்’ சூறாவளிப் புயல் நெருங்கி வருவதை அடுத்து கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசி வருவதால் நாடு முழுதும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்காசிய நாடான தென் கொரியாவில், சமீபத்தில் கன மழை பெய்தது. தலைநகர் சியோல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் 14 பேர் உயிரிழந்தனர்.
கன மழை பெய்து சில வாரங்களே ஆன நிலையில், தென் கொரிய கடற்கரை பகுதியில், ‘ஹின்னம்னார்’ சூறாவளிப் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால், நாடு முழுதும் கன மழையுடன் கூடிய சூறாவளி காற்று வீசி வருகிறது.
இந்தப் புயல், ஜெஜு தீவு நகருக்கும், புசான் நகருக்கும் இடையே இன்று கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 290 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புசான் நகரை சுற்றி 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 360க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.