இங்கிலாந்து மக்களால் மட்டுமின்றி உலக மக்களாலும் நேசிக்கப்பட்ட ராணி எலிசபெத் (வயது 96) கடந்த 8-ந் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு லண்டனில் இறுதிச்சடங்கு 19-ந் தேதி நடக்கிறது.
அன்று வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் மன்னராக சார்லஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அப்போது அங்கு எக்காளம் ஊதப்பட்டது. குண்டுகள் முழங்கின. இந்த நிகழ்ச்சியில் ராணி கமிலா, இளவரசர் வில்லியம் கலந்து கொண்டனர். இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரசும், முன்னாள் பிரதமர்கள் 6 பேரும் பங்கேற்றனர்.
அன்றைய தினத்தில் அரச குடும்பத்தினர் விண்ட்சார், பால்மோரல் மற்றும் லண்டனில் ராணியின் இல்லங்களில் வைக்கப்பட்ட மலர் அஞ்சலி மற்றும் இரங்கல் செய்திகளைப் பார்வையிட்டனர். மேலும் அரச குடும்பத்தின் ஒற்றுமையைக் காட்டும் வகையில் இளவரசர் வில்லியம், இளவரசி கேதரின் மற்றும் இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் ஆகியோர் விண்ட்சார் கோட்டையின் வாயிலில் கூடி மலரஞ்சலி செலுத்திய பொதுமக்களிடம் பேசினர்.