கைதி ஒருவரின் மரண தண்டனையை, ‘நைட்ரஜன் ஹிபோக்சியா’ என்ற முறையில் நிறைவேற்ற, அமெரிக்காவின் அலபாமா மாகாணம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, விரிவான நடைமுறையை அறிவிப்பதாகவும் கூறியுள்ளது.அமெரிக்காவில், கைதிகளின் மரண தண்டனை, விஷ ஊசியின் வாயிலாகவே நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நைட்ரஜன் ஹிபோக்சியா என்ற முறையில் தண்டனையை நிறைவேற்ற, ஓக்லஹாமா, மிஸ்சிசிப்பி மாகாணங்களைத் தொடர்ந்து, அலபாமா மாகாணமும் 2018ல் முடிவு செய்தது.ஆனால் இதுவரை இந்த முறையில் எந்த மாகாணத்திலும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இந்த முறையில் தண்டனையை எப்படி நிறைவேற்றுவது என்பது தொடர்பான வழிமுறை உருவாக்கப்படவில்லை.சாதாரணமாக, நாம் சுவாசிக்கும் காற்றில் 78 சதவீதம் நைட்ரஜன் உள்ளது. ஆக்சிஜனுடன் சேர்த்து நைட்ரஜனை சுவாசிக்கும்போது பாதிப்பு ஏற்படாது.
அதே நேரத்தில், ஆக்சிஜன் இல்லாமல் 100 சதவீதம் நைட்ரஜனை சுவாசிக்கும்போது மரணம் ஏற்படும்.இதுவே நைட்ரஜன் ஹிபோக்சியா முறையாகும்.
கைதிக்கு, நைட்ரஜன் மட்டுமே செலுத்தி, மரண தண்டனை நிறைவேற்றப்படும்.அலபாமாவைச் சேர்ந்த ஆலன் மில்லர் என்பவருக்குசெப். 22ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. விஷ ஊசி செலுத்தி கொல்லப்படுவதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது வரும் வாரத்துக்குள் நைட்ரஜன் ஹிபோக்சியா முறையில் தண்டனையை நிறைவேற்ற உள்ளதாக, அலபாமா மாகாண அரசு தெரிவித்துள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்து விரைவில் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.