”தமிழ் மொழி பெயர்ப்பாளர்களும் ஆய்வாளர்களும், தமிழ் அல்லாத மாணவர்களை கவரும் வகையில், எளிய வழி தமிழ் கற்றல் அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும்,” என, கவர்னர் ரவி தெரிவித்தார்.
சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு, நேற்று கவர்னர் ரவி வந்தார். தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகரன், அதன் செயல்பாடுகள் குறித்து கவர்னருக்கு விளக்கினார். கவர்னர் பேசியதாவது:தமிழ் மொழியின் வளம், இந்திய சமூக நாகரிக வளர்ச்சியின் பிரதிபலிப்பாக இருக்கிறது.
இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு, தமிழ் இலக்கியத்தில் உள்ள அறிவு, தமிழ் கலாசார ஞானம் போன்றவற்றை, இந்தியர் அனைவரும் கற்க வழிவகை செய்ய வேண்டும்.
இதன் வாயிலாக, தமிழகத்திற்கு அப்பால் தமிழை கொண்டு செல்ல முற்பட வேண்டும்.இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள், தங்கள் பள்ளிகளில் தமிழ் மொழியை மூன்றாம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளன
தமிழ் மொழி பெயர்ப்பாளர்களும் ஆய்வாளர்களும், தமிழ் அல்லாத மாணவர்களைக் கவரும் வகையில், எளிய வழி தமிழ் கற்றல் அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.செம்மொழி நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில், மரக்கன்று ஒன்றை கவர்னர் நட்டார்.