கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுேதாறும் நடைபெறும் தசரா விழா உலக புகழ்பெற்றது ஆகும். விஜயதசமி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழா கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழா கர்நாடகத்தின் அடையாளமாகவும் உள்ளது. மகிஷாசூரன் என்ற அரக்கனை மைசூருவின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்த நாளையே மைசூரு மக்கள் தசராவாக கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இந்த தசரா விழா மன்னர் காலத்தில் இருந்தே வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 1971-ம் ஆண்டு வரை மைசூரு தசரா மன்னர் குடும்பத்தினரால் கொண்டாடப்பட்டு வந்தது. ஜனாதிபதி முர்மு பங்கேற்கிறார் அதன்பின்னர் 1972-ம் ஆண்டில் இருந்து கர்நாடக அரசு சார்பில் ஆண்டுதோறும் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுேபால் இந்த ஆண்டுக்கான தசரா விழா வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இது 413-வது தசரா விழாவாகும். வரலாற்றுசிறப்பு மிக்க தசரா விழாவை இதுவரை கர்நாடகத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அரசியல் பிரமுகர்கள் தான் தொடங்கிவைப்பது வழக்கமாக இருந்தது.
இந்த ஆண்டு முதல் முறையாக மைசூரு தசரா விழாவை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைக்க உள்ளார். 26-ந்தேதி அவர் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, மலர்கள் தூவி தசரா விழாவை தொடங்கிவைக்க இருப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதனால் விழாவுக்கான ஏற்பாடுகள் கோலாகலமாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
5-ந்தேதி தசரா ஊர்வலம் இந்த விழாவின் சிகர நிகழ்வாக ஜம்புசவாரி ஊர்வலம் எனும் தசரா ஊர்வலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் மைசூரு அரண்மனையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பன்னிமரத்திற்கு இளவரசர் யதுவீர் சிறப்பு வழிபாடு நடத்துவார். பின்னர் தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், குதிரைகள் அலங்கரிக்கப்படும்.
பின்னர் மைசூருவின் காவல் தெய்வம் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடையிலான தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து செல்லும். இருபுறமும் மற்ற யானைகள் நடைபோடும். பின்னர் குதிரைப்படை, போலீஸ் பேண்டுவாத்தியக் குழுவினர், கலைநிகழ்ச்சி குழுவினர், அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்லும். இந்த ஊர்வலம் மைசூரு அரண்மனையில் இருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பன்னிமண்டபம் வரை நடக்கிறது