ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுவீடன். அங்கு 349 இடங்களைக் கொண்டுள்ள நாடாளுமன்றத்துக்கு 11-ந் தேதி தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சிக்கும், எதிர்க்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சி கூட்டணிக்கும் இடையே நீயா, நானா என்கிற அளவுக்கு பலத்த போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சி மயிரிழையில் தோல்வியைத் தழுவியது. எதிர்க்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சி தலைமையிலான 4 கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு 175 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி கூட்டணி 176 இடங்களில் வெற்றிவாகை சூடியது.
ஆளுங்கட்சி 173 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சி 3 இடங்களை கூடுதலாகப்பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்திருப்பதை பிரதமர் மகதலேனா ஆண்டர்சன் ஏற்றுக்கொண்டு விட்டார்.