17-வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா, அமெரிக்காவின் ஜான் மைக்கேல் டியாகோமிஹாலிஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
ஆனால் அவரை வீழ்த்திய டியாகோமிஹாலிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் ‘ரெபிசாஜ்’ வாய்ப்பை பெற்ற பஜ்ரங் பூனியா 7-6 என்ற புள்ளி கணக்கில் அர்மேனியா வீரர் வால்ஜென் டிவான்யனை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் அடியெடுத்து வைத்தார்.
கால்இறுதிக்கு முந்தையசுற்று பந்தயத்தின் போது தலையில் காயம் அடைந்த பஜ்ரங் பூனியா நேற்று முன்தினம் இரவு நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் தலையில் கட்டுப்போட்ட நிலையில் களம் புகுந்தார். காயத்தை பொருட்படுத்தாமல் மல்லுக்கட்டிய பஜ்ரங் பூனியா 11-9 என்ற புள்ளி கணக்கில் புயர்டோ ரிகோ நாட்டு வீரர் செபாஸ்டியன் ரிவேராவை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
அரியானாவை சேர்ந்த 28 வயது பஜ்ரங் பூனியா உலக சாம்பியன்ஷிப்பில் ருசித்த 4-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே, 2018-ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும், 2013, 2019-ம் ஆண்டுகளில் வெண்கலப்பதக்கமும் வென்று இருந்தார். இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 4 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான பெருமையை பெற்றார்.
இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 30 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. ஆனால் 2 பதக்கம் மட்டுமே கிட்டியது. பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தும் வெண்கலப் பதக்கத்துக்கு முத்தமிட்டார்.