ஐ.நா., பொது சபை 77வது கூட்டம் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது: கடந்த 1947-ம் ஆண்டு முதல் இந்தியாவுடன் 3 போர்களை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.இதனால் இரு தரப்பிலும் வறுமை, வேலையின்மை மட்டுமே அதிகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, சொந்த நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்காமல், சர்வதேச அரங்கில் அமர்ந்து கொண்டு அதே சிறுபான்மையினர் உரிமையை பேசுவது வேடிக்கையாகும் என தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் ஜனநாயகத்தை இந்தியா அழித்துவிட்டது. நம் அண்டை நாடான இந்தியா ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்கி நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்து ஐ.நா.விற்கான இந்திய பிரதிநிதி மிஜிடோ வினிடோ கூறியதாவது: காஷ்மீர் பிரச்னை தொடர்பான பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு உண்மைக்கு புறம்பானது. பாகிஸ்தான் தான், காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது. இந்த உன்னதமான அவையை இந்தியாவிற்கு எதிரான போலி குற்றச்சாட்டுகளை முன்வைக்க பாகிஸ்தான் பிரதமர் தேர்வு செய்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. உள்நாட்டில் நிலவும் குழப்பங்களை திசைதிருப்ப முடியாததாலும், இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும், அவர் இவ்வாறு செய்துள்ளார்.
அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புவதாக கூறும் நாடு, மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவருக்கு(தாவூத் இப்ராஹிம்) அடைக்கலம் கொடுத்திருக்கக்கூடாது. அத்ததைகய நாடு, அதன் அண்டை நாடுகளுக்கு எதிராக நியாயமற்ற மற்றும் ஏற்று கொள்ள முடியாத பிராந்திய உரிமைகளை கோர முடியாது. அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புவதாக கூறும் எந்தவொரு நாடும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கக்கூடாது.அதேபோல் மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுக்கக்கூடாது.
பாகிஸ்தானில் சமீப காலமாக ஹிந்து, சீக்கிய, கிறிஸ்தவ பெண்கள் கடத்தப்பட்டு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். சொந்த நாட்டில் சிறுபான்மையினர் உரிமையை பேணாதவர்கள், சர்வதேச அரங்கில் அமர்ந்து கொண்டு, அதே சிறுபான்மையினர் உரிமையை பேசுவது வேடிக்கையாக உள்ளது.இந்திய துணைகண்டத்தில் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற எங்களின் இலக்கு உண்மையானது. அது பரவலாக அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளப்பட்ட பார்வையே. ஆனால், இது நிறைவேற எல்லை தாண்டிய பயங்கரவாதம் முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.