உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய படையினரால் உக்ரைன் வீரர்கள் பலர் சிறை கைதிகளாக பிடிபடுகின்றனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். சிலரது நிலைமை என்னவென சரிவர தெரியவரவில்லை. இந்த நிலையில், ரஷியாவிடம் சிறை கைதியாக பிடிபடுவதற்கு முன் மற்றும் பின்னர் உக்ரைன் வீரர் மிக்கைலோ டையனோவ் எப்படி காணப்படுகிறார் என்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
கைதிகளான 205 பேரில் இவரும் ஒருவர். அதில், உக்ரைன் வீரரின் புகைப்படங்கள் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளன. இதுபற்றி உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், உக்ரைன் வீரர் மிக்கைலோ டையனோவ் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களில் ஒருவர். ரஷியாவின் கைதியாக பிடிபட்டவர்களில் மற்றவர்களின் நிலைக்கு மாற்றாக, இவர் உயிர் பிழைத்து உள்ளார். இதுவே, ஜெனீவா ஒப்பந்தத்தின்படி ரஷியா எப்படி நடந்து கொள்கிறது என்பது தெளிவாக காட்டப்பட்டு உள்ளது.
வெட்கக்கேடான நாசிச மரபுகளை ரஷியா எப்படி தொடர்ந்து பின்பற்றி வருகிறது என்பதற்கும் இது எடுத்துக்காட்டு என தெரிவித்து உள்ளது. கைதியாவதற்கு முன் போர் வீரராக துப்பாக்கியை ஏந்தி காட்சி தரும் டையனோவ், சிறை பிடித்த பின்னர், தேகம் மெலிந்து, கண்கள் அமைந்த பகுதியில் வீங்கி, விகார தோற்றத்துடன் காணப்பட்டார். அவரது கைகள் மற்றும் முகம் ஆகியவற்றில் தழும்புகள், காயங்கள் ஆகியவை காணப்படுகின்றன. கீவ் ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவர் வைக்கப்பட்டு உள்ளார் என அவரது சகோதரி அலோனா லாவ்ருஷ்கோ கூறியுள்ளார்.
எனினும், மனரீதியாக டையனோவ் வலிமையுடன் காணப்படுகிறார். அவர் திரும்பி வந்ததற்காக மகிழ்ச்சி அடைந்து உள்ளார். நான் நடக்கிறேன். தூய காற்றை சுவாசிக்கிறேன் என்று டையனோவ் கூறினார் என அவரது சகோதரி கூறியுள்ளார். அவரது சிகிச்சைக்காக நிதி உதவி திரட்டும் முயற்சியில் சகோதரி மற்றும் அவரது மகள் ஈடுபட்டு உள்ளனர்.