முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இதன் அடிப்படையில் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் ஏகாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீதேவி குப்பத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வின் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் ராஜவேலு, கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், சந்திரசேகர், ஏகாட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திராவிட பக்தன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், அரிகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.