ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் 27 பேர் காயமடைந்தனர். இன்று காலை 7.30 மணியளவில் காபூலில் உள்ள காஜ் கல்வி நிலையத்தில் மாணவர்கள் தேர்வு எழுத மையத்திற்கு வந்த போது இந்த திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.இதுவரை கிடைத்த தகவலின் படி, பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவர்.
இது குறித்த தகவல் அறிந்ததும், பாதுகாப்பு படையினர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் முழுமையான உயிர்ச்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
கல்வி நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் முயற்சியாக ஒரு பயங்கரவாதி, மாணவர்கள் கூட்டத்தில் ஒருவனாக புகுந்து இந்த சதித் தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்திருக்கும் நிலையில், தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.