ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நேற்று இந்த கல்வி மையத்தில் நேற்று ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி மையத்துக்கு வந்து மாதிரி தேர்வை எழுதி கொண்டிருந்தனர். அப்போது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.
இந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தலீபான் வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் வகுப்பறையில் சுமார் 600 மாணவ-மாணவியர்கள் இருந்தோம், ஆனால் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவிகள்” என்று தெரிவித்தார்.
உள்ளூர் பத்திரிகையாளர் பிலால் சர்வாரி என்பவர் கூறுகையில், “நாங்கள் இதுவரை 100 மாணவர்களின் உடல்களை கண்டெடுத்துள்ளோம். கொல்லப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்” என்றார். வகுப்பறையில் கொல்லப்பட்டவர்களின் மனித உடல் உறுப்புகள், கை தனியே கால்கள் தனியே இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் வேதனையுடன் கூறினர்.
இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை தலீபான்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கல்வி நிலையங்களில் அப்பாவி மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என்று இந்தியா உட்பட பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.