அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே ஐயான் சூறாவளி புயல் கடந்த புதன்கிழமை மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
சூறாவளி கரையை கடந்தபோது 4-ம் பிரிவில் அதிக ஆபத்து நிறைந்த சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது. அடுத்த நாள் (வியாழ கிழமை) அதிகாலை 2 மணி நிலவரப்படி இந்த சூறாவளி வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்றது.
அப்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல்களாக குறைந்து 1-ம் பிரிவில் வகைப்படுத்தப்பட்டது. ஆர்லேண்டோ மற்றும் கேப் கேனவரெல் பகுதிக்கு இடையே சூறாவளி மையம் கொண்டது.
அன்று காலை மத்திய புளோரிடாவையும் பின்னர் மேற்கு அட்லாண்டிக் பகுதியையும் புயல் கடந்து செல்லும் என தேசிய சூறாவளி மையம் தெரிவித்தது. இதனால், ஆரஞ்சு, பிரேவார்டு, செமினோல் மற்றும் வொலூசியா பகுதிகளில் வெள்ள எச்சரிக்கையும் விடப்பட்டது.