சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள் 205 பேரும் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும், நவம்பர் மாதம் முதல் அவர்கள் பணிக்கு வரக்கூடாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. 12 ஆண்டுகளாக உழைத்தவர்களை மனிதநேயமின்றி பல்கலைக்கழகம் பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டதாகவும், அக்டோபர் 31-ஆம் தேதியுடன் அவர்களின் பணிக்காலம் முடிவடைவதாகவும் துணைவேந்தர் முனைவர் கதிரேசன் கூறியுள்ளார். பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு மனிதநேயமற்றது என்பது மட்டுமின்றி, தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. இதை ஏற்கவே முடியாது. இம்முடிவை திரும்பப்பெற வேண்டும்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதியர்கள் கோரியது பணி நிலைப்பும், காலமுறை ஊதிய நிர்ணயமும் தான். அதற்காக அவர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அவர்களின் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார்.
அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தமிழக சட்டப்பேரவையிலும் இதே கோரிக்கையை பா.ம.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கப்படமாட்டார்கள் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.
ஆனால், உயர்கல்வி அமைச்சரின் வாக்குறுதியை பொருட்படுத்தாமல், 205 தற்காலிக ஊழியர்களையும் பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வாறு பணி நீக்கம் செய்ய முடியும்? அமைச்சரின் வாக்குறுதியையும் மீறி, தற்காலிக பணியாளர்களை பணி நீக்குவதற்காக தீர்மானத்தை ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு யார் கொடுத்தது? தற்காலிக ஊழியர்களை எதிரிகளை போல நினைத்துக் கொண்டு அவர்களை பணிநீக்க பல்கலை. நிர்வாகம் துடிப்பது ஏன்?