உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. இதனிடையே ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
முக்கிய நகரங்கள் குறிப்பிடத்தக்க அழிவுக்கு ஆளாகியதன் மூலம் போர் தொடர்ந்தது. உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், போரின் பயங்கரத்தை முறியடிக்கவும், அதன் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ள மக்களின் கனவை நிறைவேற்றும் வகையிலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு உக்ரைன் அரசு ஆயத்தமாகி வருகிறது.
2030இல் நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை போட்டியை ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்துவதற்கான கூட்டு முயற்சியை உக்ரைன் தொடங்கி உள்ளது. இது விளையாட்டு உலகிற்கு அப்பால் மக்களை இணைக்கும் என்று மூன்று நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக உக்ரைன் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் ஆண்ட்ரி பாவெல்கோ கூறுகையில், “உலகக்கோப்பை போட்டியை நடத்தும் திட்டத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி ஆதரவு தெரிவித்துள்ளார். ஏலத்தில் ஐரோப்பிய கால்பந்து முன்பு இல்லாத வகையில் ஒன்றுபட்டுள்ளது” என்று அவர் கூறினார்.