தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேயின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
அனைவரும் சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரித்துடையவர்கள் என்றும், எந்தவொரு குடிமகனுக்கும் அரசியல் கருத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்றும், அதன் மூலம் முதலிகேவின் பாதுகாப்பில் பொலிஸார் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு எதிராக, ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை தொடர்ந்து முதலிகே கைது செய்யப்பட்டார்.
முதலிகே பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார்,
அத்துடன் அவர் ஆகஸ்ட் 23 அன்று தங்காலை மத்திய தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டார்.
உயிருக்கு ஆபத்து
இந்தநிலையில் முதலிகே மற்றும் மேலும் இருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் அவர்களை பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சில பிரதேசங்களில் சோதனையிடுவதாக கூறி, தினமும் இரவில் முதலிகே சிறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுவதாகவும், அதனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அண்மையில் நாடாளுமன்றத்தில், அச்சம் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.