பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், அவர்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பது, பல்துறைகளிலும் அவர்களது சாதனைகளை அங்கீகரித்தல் போன்றவற்றை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்., 11ல் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
‘நமது உரிமை, எதிர்காலத்துக்கான நமது இப்போதைய நேரம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதால்
அக்குடும்பம் மட்டுமல்லாமல் சமூகமே முன்னேறும். இன்றும் சில நாடுகளில் பெண் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும்.
பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் குதுாகலத்தை யாராலும் அளவிட முடியாது.பெண் குழந்தைகளை ‘மகாலட்சுமி’ எனவும் ‘ஆதி பராசக்தி’ எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு.
இந்தியாவில் பெண் குழந்தைகளை வழி நடத்தும் விதம் காலம் காலமாக அன்புடனும், அரவணைப்புடனும் தொடர்கிறது.
பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்த கல்வி மூலம் எளிதாக தந்து விடலாம். அவர்களை சரியான பாதையில் கால் பதிக்க வைத்து, அவர்களுடன் கை கோர்த்து, அவர்கள் பயணிக்கும் பாதையை பெற்றோர் உருவாக்கி கொடுக்க வேண்டும்.
செல்லும் பாதையை செம்மைப்படுத்தி, வழித்தடங்களில் இருக்கும் கரடுமுரடுகளையும், முட்புதர்களையும் அகற்றி விட்டாலே போதும். சிறந்த இலக்கை அடையும் சக்தி பெண் குழந்தைகளிடம் உள்ளது .
மகாராணியாகவும், சிறந்த நாயகியாகவும் தன்னை தானே செதுக்கி கொண்டு ஒரு குடும்பத்தையும், ஒரு பாரம்பரியத்தையும், ஒரு சமூகத்தையும் அவள் ஒருவரால் மட்டும் துாக்கி வைத்து போற்ற முடியும். அதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.பெண் குழந்தைகள் அழகுப் பதுமைகள் அல்ல… அறிவின் ஜோதிகள். ஊக்குவிப்போம். நல்திசை காட்டுவோம்.